திருவள்ளுவர் தனது ஒப்பற்ற படைப்பான "திருக்குறள்" நூலில், எக்காலத்திற்கும் பொருத்தமாகப் பின்வரும் குறளை இயற்றியுள்ளார்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..
--திருக்குறள்
காலங்காலமாகத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இதற்கு இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சங்க இலக்கியங்களும் சான்று ஆகும். பாடல் இயற்றல், மனப்பாடம் செய்தல், கணக்குப் புதிர்களை விடுவித்தல் முதலானவை தமிழ்நாட்டின் சொந்தக் கல்வி முறையில் உயர்வாகக் கருதப்பட்டது; அதன் பாடத்திட்டமும் கற்பித்தல் உத்திகளும் பல வரலாற்றாசிரியர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 1822-26 சென்னை மாகாணத்தில் உள்ள உள்நாட்டுக் கல்வி பற்றிய சுற்றாய்வு, தமிழ்நாட்டின் உள்நாட்டுக் கல்வி முறையின் அத்தகைய ஆவணங்களில் ஒன்றாகும்.
1813 வரை, கிழக்கிந்திய கம்பெனி இந்திய உள்நாட்டு மக்களிடையே கல்வியைப் பரப்பும் பணியை மேற்கொள்ளவில்லை. சென்னை மாகாணத்தின் கவர்னர் சர் தாமஸ் மன்றோ, 1826ஆம் ஆண்டு பொதுக் கல்வி வாரியத்தை நிறுவியதன் மூலம் கல்வி முறையை ஒழுங்குபடுத்தி நிறுவனமயமாக்கினார். உதவி பெறும் பள்ளிகளுக்கான முதல் தொகுப்பு மானியம் 1855இல் வழங்கப்பட்டது; மேலும் 1881 வாக்கில், கணிசமான உள்நாட்டுக் கல்வி நிறுவனங்கள் உதவி பெற்றன. நிதி உதவி வழங்குவதற்காக மாகாண அரசால் வடிவமைக்கப்பட்ட விதிகளும் ஒழுங்குமுறைகளும் பாடத்திட்டம், கற்பித்தல், கற்றல் பொருட்கள், ஆசிரியர்களின் பங்கு ஆகியவற்றின் தன்மையை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றியமைத்தன.
உள்ளூர் வாரியங்கள் சட்டம் 1871இன் கீழ், உள்ளூர் வாரியங்கள் அமைக்கப்பட்டன; அவை பள்ளிகளைத் திறக்கவும், அரசாங்கத்திடமிருந்து மானியங்களைப் பெறவும் அதிகாரம் பெற்றன. சென்னை மாகாணத் தொடக்கக் கல்விச் சட்டம் 1920, தொடக்கக் கல்வியின் முன்னேற்றத்திற்காக உள்ளாட்சி அமைப்புகள் நிலம் அல்லது சொத்து வரி மீது கல்வி சிறப்பு வரி விதிக்க வழிவகுத்தது.