எதிர்காலக் குடிமக்களுக்குத் தரமான கல்வியை அளிப்பதற்கு, தமிழ்நாடு அரசு மிகுந்த முக்கியத்துவம் வழங்குகிறது. இன்றைய குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்குக் கல்வியே வாயிலாகும். மேலும், பள்ளிக் கல்வியின் தொடக்க ஆண்டுகளே மாணவர்களின் எதிர்கால நலனுக்கான அடித்தளத்தை உருவாக்குகின்றன. மாநிலத்தின் முதன்மையான குறிக்கோள் அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான எளிதில் கிடைக்கவல்ல உள்ளடக்கிய கல்வியை வழங்குவதே ஆகும். இந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு அரசு 2021-2022ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.32,599.54 கோடியை ஒதுக்கியுள்ளது.
பள்ளிக் கல்வியைப் பொறுத்தமட்டில் அரசு பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல், அவ்வாறு சேர்க்கப்பட்ட குழந்தைகளை இடைநிற்றல் ஏதுமின்றி இடைநிலைக் கல்வி வரை முழுமையாக பள்ளிக் கல்வியைத் தொடரச் செய்தல், குழந்தைகளின் வயதுக்கேற்ற கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல், ஆசிரியர்களுக்கு சிறந்த பயனுள்ள பயிற்சிகளை அளித்து அவர்களின் கற்பித்தல் திறனை வலுப்படுத்துதல், கற்றல் கற்பித்தலின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படை எழுத்தறிவையும், எண் திறன்களையும் கற்பித்தல், பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், குழந்தைகளுக்கு புதுயுகத் திறன்களை ஊட்டுதல் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் ஆகியவற்றை கோவிட் போன்ற இயல்பல்லாத சூழ்நிலைகளில் உறுதிப்படுத்துதல் ஆகியவை பள்ளிக் கல்வியைப் பொறுத்தமட்டில் அரசின் கவனத்திற்குரிய முக்கியமானவையாக அமைகின்றன.
அராசங்கத்தின் மேலே குறிப்பிட்ட பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றும் பொறுப்புகளை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அமைந்துள்ள பல்வேறு இயக்ககங்கள் மேற்கொண்டு வருகின்றன. தொடக்கக் கல்வி இயக்ககம், பள்ளிக் கல்வி இயக்ககம், மெட்ரிகுலேசன் பள்ளிக்கல்வி இயக்ககம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, முறைசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் ஆகியவை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அமைந்துள்ள இயக்ககங்கள் ஆகும். மேலும், இத்துறை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) அரசுத் தேர்வு இயக்ககம், பொது நூலக இயக்ககம், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகிய அமைப்புகளின் உதவியோடு இயங்கி வருகிறது.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
-குறள்-400
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை
-கலைஞர் உரை